Saturday, March 9, 2024

காஃபி மணம் (காதல் மனம்)

#மாண்புறு_மங்கையே_24
#காதல்_மனம்
#(காஃபி மணம்)
#திருமதிஅப்சரஸ்_பீனா_லோகநாதன்

"அண்ணா, அண்ணி இல்லையா?"என்று கேட்டுக் கொண்டே, கேட்டைத் திறந்து உள்ளே வந்தாள் பாலாவின் சமீபத்திய தோழி ராதிகா...

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்து, குரல் கேட்டுத் திரும்பினான் 
அண்ணா என்று அழைக்கப்பட்ட கார்த்திக்.

"காஃபி குடிச்சுட்டு இருக்கா. இப்ப வந்துருவா. நீ கொஞ்ச நேரம் இங்குக் காத்திரும்மா"என்றான்.

"பரவாயில்லை அண்ணா, நான் போய்ப் பார்த்துக்கிறேன்" என்று உள்ளே செல்லப் பார்க்க, 

"அச்சோ!! கொஞ்சம் நில்லும்மா. அவள் தான் காஃபி குடிக்கிறான்னு சொன்னேனே" என்று திரும்பவும் சொல்ல, 'காஃபி தானே குடிக்கிறார். அதற்கு ஏன் இவர் இவ்வளவு பதறுகிறார்?' என்று முகபாவனை மாறக் கார்த்திக்கை பார்த்தாள்.

ராதிகாவின் முகமாற்றத்தைப் பார்த்துக்கொண்டே, "இப்படி உட்காரம்மா" என்று நாற்காலியை இழுத்து போட்டு விட்டு, அவனும் எதிரில் அமர்ந்தான்.

"எங்களுக்குத் திருமணமாகி 35 வருஷம் ஆகுது. திருமணத்துக்குப் பின்னாடி மாமியார், மகள்னு எங்களுக்காக அவள் நிற்காம ஓடி ஓடி ஓய்வின்றி குடும்பத்துக்காக உழைத்தவள். மகளைத் திருமணம் செய்து கொடுத்துட்டு, இப்ப தான் அவள் நிதானமா இருக்கிறா. நானும் அவள் எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு நம்பிக்கையில சம்பாதிப்பதில் கவனம் செலுத்தினேன்...

நான் ஓய்வு பெற்ற பிறகு, தனிமையில் ஒரு நாள் அவகிட்டே 'உன் ஆசை என்ன?'ன்னு சும்மா கேட்டேன். அதுக்கு அவள் சொன்ன பதிலில் நான் ஆடிப் போயிட்டேன்." என்றான்.

"அப்படி என்ன சொன்னாங்க அண்ணி?" என்று வினவினாள் ராதிகா.

கண்களில் சிறு கண்ணீர் எட்டிப் பார்க்க, "எனக்குத் தனியா உட்கார்ந்து, காஃபியை அதன் மணத்துடன் சூடா ரசிச்சு ருசிச்சு குடிக்கணும்" என்று கூறிய கார்த்திக்கின் குரல் கம்மியது.

அவளுக்கே அவளுக்கென்று ஓர் நேரம். அவள் அவளாக உணரும் தருணம்.
அதனால் அந்த நேரத்தில் அவளை யாரும் தொந்தரவு செய்ய விடமாட்டேன்" என்று
சொல்லி முடிக்கவும்,

"வா ராது, எப்ப வந்த? ஏன் இங்க உட்கார்ந்து இருக்க? என்ன காலையிலேயே உங்க அண்ணா கூட அரட்டையா?" என்று கேட்டுக்கொண்டே கணவரின் அருகில் சென்று அமர்ந்தாள் பாலா.

"ராது, காஃபி குடிக்கிறியா?" என்று கேட்க, ராதிகா உடனே பாலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு "நான் என் வீட்டுல போய் உங்களைப் போலத் தனியா உட்கார்ந்து ரசிச்சு குடிக்கிறேன். இனிமேல் உங்க காஃபி நேரத்தில் வந்து தொந்தரவு செய்யமாட்டேன் அண்ணி" என்று கூறியதும், "உன்னிடமும் சொல்லிட்டாரா?" என்று கணவனைப் பார்த்துச் செல்லமாய் கோபித்து கொண்டாள்.

"நம் இணைகளுக்கு ஒதுக்கும் நேரமும், செய்யும்
சின்ன சின்ன விசயங்கள் தான் பெரிய சந்தோசத்தைக் கொடுக்கிறது.

காலம் கடந்தாலும் கட்டிய மனைவியின் மேல் உள்ள காதல் குறையாத தம்பதியரை பார்த்து, "வாழ்க்கையை உங்களைப் போல வாழணும்" என்று வியந்து கூறி விடை பெற்றுச் சென்றாள் ராதிகா.

அங்குக் கார்த்திக் மனைவியைப் பார்த்து "காஃபி குடிச்சிட்டியம்மா?" என்று காதலுடன் கண்ணடிக்க, "காலம் கடந்தும் காதல் மன்னன்னு நினைப்பு" என்று நாணிச் சிரித்தாள் அவன் அன்பு மனைவி பாலா!!

( என் சின்ன ஆசையை சொல்லிட்டேன் உங்க சின்னச் சின்ன ஆசைகள் என்ன என்று சொல்லிட்டு போங்க நட்புக்களே...)

No comments:

Post a Comment

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...