Saturday, March 9, 2024

மனைக்தக்க_மாண் புடையவள்

#மாண்புறு_மங்கையே

குறள்:
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

விளக்கம்:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

தலைப்பு: மனைக்தக்க_மாண்புடையாள் 

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

மனைவியின் பின்னாடியே சென்றுகொண்டிருந்தான் மாதவன். "இந்த ஒரு முறை மட்டும் ப்ளீஸ் மாதும்மா... இனிமேல் நீ சொல்லாம நான் எதுவும் செய்யமாட்டேன்" என்று கெஞ்சியபடி இருந்தான். மலையேறிய மனைவியை மலை இறக்க வழி தெரியாமல் முழித்துக் கொண்டு...

"குழந்தைக்கு என்ன தெரியும்? கண்ணில் பட்டதெல்லாம் ஆசைப்பட்டு அடம்பிடித்து கேட்க மட்டுமே தெரியும். நாம தான் நல்லது கெட்டதை சொல்லிக் கொடுத்து, பக்குவமா செயல்படணும். இப்படி நீங்களே செல்லம் கொடுத்துக் கெடுத்தா, அப்புறம் என்ன பண்றது?" என்று பொரிந்து தள்ளினாள் மாதவி.

மகளுடன் தனியே கடைக்குச் சென்றவன், மகள் கேட்டாள் என்று விலை உயர்ந்த பொம்மையை வாங்கிக் கொடுத்திருந்தான். அதற்குத் தான் இத்தனை கோபம் கொண்டாள் அவனது மனைவி.

வீணாகச் செலவு செய்வது மாதவிக்கு பிடிக்காது. பார்த்துப் பார்த்துச் செலவு செய்வாள். அதில் இருந்த பக்குவத்தை நினைத்துப் பல நாட்கள் பெருமை கொள்வான் கணவனாக மாதவன்... ஆனால், மகள் என்று வந்துவிட்டால், தந்தை பாசம் அவன் கண்ணை மறைத்து விடும். பலமுறை மாதவி சொல்லிப் பார்த்தும் அவன் கேட்காமல் செயல்பட, இன்று பொறுமை இழந்து கோபத்துடன் பொங்கி விட்டாள்.

அன்னையின் கோபத்தைக் கண்ட ஐந்து வயது மகள் மதுமதி அவளை நெருங்கி வந்து, "சாரிம்மா, இனிமே அப்பா கிட்ட எதுவும் கேட்கமாட்டேன்" என்று சொல்லிட, மகளின் முன் அமர்ந்து "ஆசைப்பட்டதெல்லாம் வாங்காம அவசியத்திற்கு மட்டுமே வாங்கணும். தேவைக்கு அதிகமா எதையும் வாங்க கூடாது. உன்கிட்ட தான் நிறைய பொம்மை இருக்குல்ல? அதை வச்சு விளையாடப் பழகிக்கோ. அதுக்காக, எப்போதாவது உனக்கு மனசுக்கு பிடிச்சதை வாங்க ஆசைப்படுறப்போ, வாய் திறந்து சொல்லவும், கேட்கவும் தயங்காதே... உனக்காகத் தான் நானும், அப்பாவும் இருக்கோம் என்பதையும் மறக்காதே" என்று மகளுக்குப் புரியும் விதமாகச் சொல்ல, அதில் கணவனும் மனைவியின் தனக்கான மறைமுக அறிவுரையையும் புரிந்து கொண்டான்.

அன்னை தன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பதைக் கண்டு, மகள் அவளைக் கட்டிக் கொள்ள, மாதவனும் மனைவியையும் மகளையும் சேர்த்து அரவணைத்துக் கொண்டான்.

மகளை விளையாட அனுப்பி விட்டு
மாதவன் "குழந்தை தானே மாதும்மா?" என்று மனைவியிடம் ஆரம்பிக்க, 
 ''கேட்டதெல்லாம் கிடைக்கும் எனும் எண்ணத்தை அவள் மனதில் உருவாக்கக் கூடாது.
கேட்டாலும் தனக்கு எது அவசியமோ, அது மட்டும் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவளிடம் உருவாக்கணும்.நம்மைப் பார்த்துத் தான் பிள்ளை வளருகிறது என்பதை மனசுல வச்சிட்டு நீங்களும் நடந்துக்கோங்க.

இன்றோடு முடிவதில்லை மகளின் பாசம். வருங்காலத்தையும் கொஞ்சம் யோசித்து செயல்படுவது நல்லது" என்று எடுத்துச் சொல்ல, மனைவியின் கோபம் குறைந்ததில் மகிழ்ச்சியுடன், பின்னால் இருந்து அவளை அணைத்து, "மாண்புமிகு மனைவியே என்னை மன்னித்து விடுங்கள்" என்று கொஞ்சினான் மாதவன்.

"மன்னிப்பை ஏற்றுக் கொண்டோம் மாதவா" என்றாள் மாதவி. இருவரின் செல்லச் சிரிப்பொலியில் மகளின் புன்னகையும் சேர்ந்து நிறைந்தது அவர்களது இல்லம்!!

No comments:

Post a Comment

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...