Thursday, March 21, 2024

கவிதை காதலி......

        
            கவிதை காதலியே....

கண்ணில் தோன்றும் காட்சிகள் எல்லாம் கவிதையாய் கிறுக்குகிறேன்.......

கவிதையே காதலாய் 
கனவு காண்கிறேன்...
காதலியே உனைக் கண்டு காதலால் கிறங்குகிறேன்

காற்றைப் போல 
காதலை சுவாசிக்கிறேன்
கனவுகளை எல்லாம் கவிதையாய் வடிக்கிறேன் கண்டு செல்வாயோ 
காதால் கேட்டு 
காதல் கொள்வாயோ....

காதலை பிடிக்கும் அளவுக்கு 
கவிதையும் பிடிக்கும்
கவிதையை பிடிக்கும் அளவுக்கு 
காதலியையும் பிடிக்கும்....

காதலையும் கவிதையையும் காதலனாய் எனையும் 
காண பிடிக்குமோ????
காதலியே.....

காதலை எல்லாம் கவிதையாய் எழுதினேன்
கவிதை நாளில் 
காதலை சொல்கிறேன் காதலனாய் ஏற்பாயோ......
கனவு என 
கலைந்து செல்வாயோ
காற்றை போல 
கடந்து செல்வாயோ....
கை சேர்வாயோ 
கனவு காதலியே.......

Friday, March 15, 2024

சொல்


சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே......

பாடலின் வரிகள் கேட்ட பிறகு
அவனின் சொல்லில் உள்ள உணர்வுகளை உணர்ந்த தருணம்....

              சொல்....

சொல்லில் அடங்கா உணர்வுகளை 
ஒரு சொல்லில் சொல்லாமல் சொல்கிறான் அவனின் உணர்வுகளை.....


சொல்லுமா _ அன்பாய் ,நட்பாய்

சொல்லுப்பா _ பாசமாய்,பந்தமாய்

சொல்லுடா_ உரிமையாக பரிவாக.....

சொல்லுடாம்மா_அக்கறையாய் , அரவணைப்பாக

சொல்லிடேன்_பரிதவிப்பாக

சொல்றியா_ ஏக்கமாக ,எதிர்பார்ப்பாக....

சொல்லு _அமைதியாக, நிதானமாக

சொல்லுடி _ ஆசையாக ஆதங்கமாக

சொல்லித் தொலை_ கோவமாக, வெறுப்பாக

சொல்லேண்டி _ சலிப்பாக,சங்கடமாக.....

சொல்லப் போறியா இல்லையா _ அதட்டலாக, மிரட்டலாக,

சொல்லாயோ_ கவிதையாக,ரசனையாக

சொல்றாளா பாரு 
ராட்சசி _ ஒட்டு மொத்த காதலாக....

Monday, March 11, 2024

இதமான காதல்

இதழ் வழியே
இதமாய் 
இறங்கும் காபிபோல 
இரு விழி வழியே
இதயத்துக்குள் செல்கிறது 
இருவரின் காதலும்....

Saturday, March 9, 2024

காஃபி மணம் (காதல் மனம்)

#மாண்புறு_மங்கையே_24
#காதல்_மனம்
#(காஃபி மணம்)
#திருமதிஅப்சரஸ்_பீனா_லோகநாதன்

"அண்ணா, அண்ணி இல்லையா?"என்று கேட்டுக் கொண்டே, கேட்டைத் திறந்து உள்ளே வந்தாள் பாலாவின் சமீபத்திய தோழி ராதிகா...

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்து, குரல் கேட்டுத் திரும்பினான் 
அண்ணா என்று அழைக்கப்பட்ட கார்த்திக்.

"காஃபி குடிச்சுட்டு இருக்கா. இப்ப வந்துருவா. நீ கொஞ்ச நேரம் இங்குக் காத்திரும்மா"என்றான்.

"பரவாயில்லை அண்ணா, நான் போய்ப் பார்த்துக்கிறேன்" என்று உள்ளே செல்லப் பார்க்க, 

"அச்சோ!! கொஞ்சம் நில்லும்மா. அவள் தான் காஃபி குடிக்கிறான்னு சொன்னேனே" என்று திரும்பவும் சொல்ல, 'காஃபி தானே குடிக்கிறார். அதற்கு ஏன் இவர் இவ்வளவு பதறுகிறார்?' என்று முகபாவனை மாறக் கார்த்திக்கை பார்த்தாள்.

ராதிகாவின் முகமாற்றத்தைப் பார்த்துக்கொண்டே, "இப்படி உட்காரம்மா" என்று நாற்காலியை இழுத்து போட்டு விட்டு, அவனும் எதிரில் அமர்ந்தான்.

"எங்களுக்குத் திருமணமாகி 35 வருஷம் ஆகுது. திருமணத்துக்குப் பின்னாடி மாமியார், மகள்னு எங்களுக்காக அவள் நிற்காம ஓடி ஓடி ஓய்வின்றி குடும்பத்துக்காக உழைத்தவள். மகளைத் திருமணம் செய்து கொடுத்துட்டு, இப்ப தான் அவள் நிதானமா இருக்கிறா. நானும் அவள் எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு நம்பிக்கையில சம்பாதிப்பதில் கவனம் செலுத்தினேன்...

நான் ஓய்வு பெற்ற பிறகு, தனிமையில் ஒரு நாள் அவகிட்டே 'உன் ஆசை என்ன?'ன்னு சும்மா கேட்டேன். அதுக்கு அவள் சொன்ன பதிலில் நான் ஆடிப் போயிட்டேன்." என்றான்.

"அப்படி என்ன சொன்னாங்க அண்ணி?" என்று வினவினாள் ராதிகா.

கண்களில் சிறு கண்ணீர் எட்டிப் பார்க்க, "எனக்குத் தனியா உட்கார்ந்து, காஃபியை அதன் மணத்துடன் சூடா ரசிச்சு ருசிச்சு குடிக்கணும்" என்று கூறிய கார்த்திக்கின் குரல் கம்மியது.

அவளுக்கே அவளுக்கென்று ஓர் நேரம். அவள் அவளாக உணரும் தருணம்.
அதனால் அந்த நேரத்தில் அவளை யாரும் தொந்தரவு செய்ய விடமாட்டேன்" என்று
சொல்லி முடிக்கவும்,

"வா ராது, எப்ப வந்த? ஏன் இங்க உட்கார்ந்து இருக்க? என்ன காலையிலேயே உங்க அண்ணா கூட அரட்டையா?" என்று கேட்டுக்கொண்டே கணவரின் அருகில் சென்று அமர்ந்தாள் பாலா.

"ராது, காஃபி குடிக்கிறியா?" என்று கேட்க, ராதிகா உடனே பாலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு "நான் என் வீட்டுல போய் உங்களைப் போலத் தனியா உட்கார்ந்து ரசிச்சு குடிக்கிறேன். இனிமேல் உங்க காஃபி நேரத்தில் வந்து தொந்தரவு செய்யமாட்டேன் அண்ணி" என்று கூறியதும், "உன்னிடமும் சொல்லிட்டாரா?" என்று கணவனைப் பார்த்துச் செல்லமாய் கோபித்து கொண்டாள்.

"நம் இணைகளுக்கு ஒதுக்கும் நேரமும், செய்யும்
சின்ன சின்ன விசயங்கள் தான் பெரிய சந்தோசத்தைக் கொடுக்கிறது.

காலம் கடந்தாலும் கட்டிய மனைவியின் மேல் உள்ள காதல் குறையாத தம்பதியரை பார்த்து, "வாழ்க்கையை உங்களைப் போல வாழணும்" என்று வியந்து கூறி விடை பெற்றுச் சென்றாள் ராதிகா.

அங்குக் கார்த்திக் மனைவியைப் பார்த்து "காஃபி குடிச்சிட்டியம்மா?" என்று காதலுடன் கண்ணடிக்க, "காலம் கடந்தும் காதல் மன்னன்னு நினைப்பு" என்று நாணிச் சிரித்தாள் அவன் அன்பு மனைவி பாலா!!

( என் சின்ன ஆசையை சொல்லிட்டேன் உங்க சின்னச் சின்ன ஆசைகள் என்ன என்று சொல்லிட்டு போங்க நட்புக்களே...)

மனைக்தக்க_மாண் புடையவள்

#மாண்புறு_மங்கையே

குறள்:
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

விளக்கம்:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

தலைப்பு: மனைக்தக்க_மாண்புடையாள் 

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

மனைவியின் பின்னாடியே சென்றுகொண்டிருந்தான் மாதவன். "இந்த ஒரு முறை மட்டும் ப்ளீஸ் மாதும்மா... இனிமேல் நீ சொல்லாம நான் எதுவும் செய்யமாட்டேன்" என்று கெஞ்சியபடி இருந்தான். மலையேறிய மனைவியை மலை இறக்க வழி தெரியாமல் முழித்துக் கொண்டு...

"குழந்தைக்கு என்ன தெரியும்? கண்ணில் பட்டதெல்லாம் ஆசைப்பட்டு அடம்பிடித்து கேட்க மட்டுமே தெரியும். நாம தான் நல்லது கெட்டதை சொல்லிக் கொடுத்து, பக்குவமா செயல்படணும். இப்படி நீங்களே செல்லம் கொடுத்துக் கெடுத்தா, அப்புறம் என்ன பண்றது?" என்று பொரிந்து தள்ளினாள் மாதவி.

மகளுடன் தனியே கடைக்குச் சென்றவன், மகள் கேட்டாள் என்று விலை உயர்ந்த பொம்மையை வாங்கிக் கொடுத்திருந்தான். அதற்குத் தான் இத்தனை கோபம் கொண்டாள் அவனது மனைவி.

வீணாகச் செலவு செய்வது மாதவிக்கு பிடிக்காது. பார்த்துப் பார்த்துச் செலவு செய்வாள். அதில் இருந்த பக்குவத்தை நினைத்துப் பல நாட்கள் பெருமை கொள்வான் கணவனாக மாதவன்... ஆனால், மகள் என்று வந்துவிட்டால், தந்தை பாசம் அவன் கண்ணை மறைத்து விடும். பலமுறை மாதவி சொல்லிப் பார்த்தும் அவன் கேட்காமல் செயல்பட, இன்று பொறுமை இழந்து கோபத்துடன் பொங்கி விட்டாள்.

அன்னையின் கோபத்தைக் கண்ட ஐந்து வயது மகள் மதுமதி அவளை நெருங்கி வந்து, "சாரிம்மா, இனிமே அப்பா கிட்ட எதுவும் கேட்கமாட்டேன்" என்று சொல்லிட, மகளின் முன் அமர்ந்து "ஆசைப்பட்டதெல்லாம் வாங்காம அவசியத்திற்கு மட்டுமே வாங்கணும். தேவைக்கு அதிகமா எதையும் வாங்க கூடாது. உன்கிட்ட தான் நிறைய பொம்மை இருக்குல்ல? அதை வச்சு விளையாடப் பழகிக்கோ. அதுக்காக, எப்போதாவது உனக்கு மனசுக்கு பிடிச்சதை வாங்க ஆசைப்படுறப்போ, வாய் திறந்து சொல்லவும், கேட்கவும் தயங்காதே... உனக்காகத் தான் நானும், அப்பாவும் இருக்கோம் என்பதையும் மறக்காதே" என்று மகளுக்குப் புரியும் விதமாகச் சொல்ல, அதில் கணவனும் மனைவியின் தனக்கான மறைமுக அறிவுரையையும் புரிந்து கொண்டான்.

அன்னை தன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பதைக் கண்டு, மகள் அவளைக் கட்டிக் கொள்ள, மாதவனும் மனைவியையும் மகளையும் சேர்த்து அரவணைத்துக் கொண்டான்.

மகளை விளையாட அனுப்பி விட்டு
மாதவன் "குழந்தை தானே மாதும்மா?" என்று மனைவியிடம் ஆரம்பிக்க, 
 ''கேட்டதெல்லாம் கிடைக்கும் எனும் எண்ணத்தை அவள் மனதில் உருவாக்கக் கூடாது.
கேட்டாலும் தனக்கு எது அவசியமோ, அது மட்டும் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவளிடம் உருவாக்கணும்.நம்மைப் பார்த்துத் தான் பிள்ளை வளருகிறது என்பதை மனசுல வச்சிட்டு நீங்களும் நடந்துக்கோங்க.

இன்றோடு முடிவதில்லை மகளின் பாசம். வருங்காலத்தையும் கொஞ்சம் யோசித்து செயல்படுவது நல்லது" என்று எடுத்துச் சொல்ல, மனைவியின் கோபம் குறைந்ததில் மகிழ்ச்சியுடன், பின்னால் இருந்து அவளை அணைத்து, "மாண்புமிகு மனைவியே என்னை மன்னித்து விடுங்கள்" என்று கொஞ்சினான் மாதவன்.

"மன்னிப்பை ஏற்றுக் கொண்டோம் மாதவா" என்றாள் மாதவி. இருவரின் செல்லச் சிரிப்பொலியில் மகளின் புன்னகையும் சேர்ந்து நிறைந்தது அவர்களது இல்லம்!!

#மாண்புறு_மங்கையே

#மாண்புறு_மங்கையே 24.....
திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்.....

அழகு என்ற சொல்லில் 
அழகாய் நம் எண்ணங்களை திசை திருப்பி நம்மை
அடிமை படுத்தி விடுகிறார்கள்

ஆசை என்ற பெயரில்
நகை பணம் என்று 
அற்ப சந்தோஷத்தில் நம்மை 
அடிமை படுத்தி விடுகிறார்கள்

அர்ப்பணிப்பு என்ற மந்திரத்தில் 
அன்னை தெய்வம் அன்பு என்று சொல்லி நம்மை
அடிமை படுத்தி விடுகிறார்கள்

ஆதரவு என்று சொல்லி
அனைத்து பிரச்சனைகளை கூறி அவர்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தி 
நம்மை 
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அரவணைப்பு என்ற பெயரில் சேவைக்கே பிறந்தவர்கள் நாம் என்று
சொல்லி 
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அடக்கம் என்ற பெயரில்
அடங்கி நடக்க சொல்லி
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அக்கறை என்ற பெயரில்
அவர்களின் கைக்குள் 
அகப்பட்டு நம்மை
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அடிமையாக இருக்கிறோம் என்பதை அறியாமலே அடிமை படுத்தி வைத்து இருக்கிறார்கள்....

ஆண் என்ற ஒற்றை ஆணவத்தை வைத்து
ஆண்டாண்டு காலமாக 
அடிமை சாசனம் எழுதி தந்தது போல
அடிமை படுத்தும் 
ஆண் வர்கத்திடம் இருந்து மீழ்வோம்.....

மாண்புறு மங்கையை....
மகிழ்ச்சி என்பது 
மற்றவர்களை சந்தோச படுத்துவது அல்ல....
மனதினில் புதைத்து மறைத்து வைத்த உன் 
மன எண்ணங்களை மருகும் கனவுகளை மிரட்டும் லட்சியங்கள்களை அடைய நீ எடுக்கும் முயற்சியே 
மகிழ்ச்சி என்று உணர் மனமே.....

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...